கோவையில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் திருப்புதல் தேர்வு - முதன்மை கல்வி அலுவலர் தகவல்
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருதி வரும் 31-ம் தேதி வரை 10,11 மற்றும் 12-ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது.
வரும் 19-ம் தேதி முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் திருப்புதல் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வரும் 19-ம் தேதி முதல் நடத்தப்பட இருந்தது. அரசின் அறிவிப்பை அடுத்து நேரடியாக தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது.
இருப்பினும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி உள்ளனர்.
எனவே. அவர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் மூலமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி, வினாத்தாள் தயார் செய்து மாணவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி, மாணவர்களை வீட்டில் இருந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய பின் வினாத்தாளை மாணவர்கள் மீண்டும் வாட்ஸ் அப்பில் அப்லோடு செய்ய வேண்டும். இதனை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வார்கள். இதனால், மாணவர்களுக்கு தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும். படித்தது வீணாகாது. இவ்வாறு அவர் கூறினார்.